சென்னை: தமிழக அரசின் சென்னை அறிவியல் திருவிழா கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நேற்று துவங்கியது. இந்நிகழ்ச்சி நாளை (செப்டம்பர் 26) வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அறிவியல் நகரம் அமைப்பு பொதுமக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2008-ம் ஆண்டு முதல், சென்னை அறிவியல் விழா நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை, பிர்லா கோளரங்கத்தில், நடப்பாண்டுக்கான சென்னை அறிவியல் திருவிழா, நேற்று துவங்கியது. இது அறிவியல் கண்காட்சி அரங்குகள், செய்முறை விளக்கங்கள் மற்றும் லேசர் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
அதன்படி நாளை (செப்டம்பர் 26) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் திருவிழாவை பொதுமக்கள் பார்வையிடலாம். இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று மதியம் சென்னை அறிவியல் திருவிழாவை துவக்கி வைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் அறிவியல் நகரம் கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அங்கு ஆண்டுதோறும் அறிவியல் விழா நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு அறிவியல் திருவிழாவில், இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை, சென்னை பல்கலைக்கழகம், மத்திய தோல் மருத்துவ நிறுவனம், இந்திய மருத்துவ இயக்குநரகம் போன்ற முக்கிய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களால் 75 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
3 நாட்கள் நடைபெறும் இந்த விழா, மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்க உதவும்,” என்றார். இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ், அறிவியல் நகர துணை தலைவர் தேவ் ராஜ் தேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.