கேரளப் பல்கலைக் கழகத்தில் இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு அதன் பங்களிப்பாக 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சித் துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:- தமிழுக்குச் சிலப்பதிகாரம் என்ற மாபெரும் காவியத்தை அளித்து அழியாப் புகழ் பெற்ற இளங்கோவடிகளுக்கு, கேரளாவில் ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் இருக்கை ஏற்படுத்த வேண்டும் என்பது, கேரள வாழ் தமிழர்களின் நீண்ட நாள் ஆசை.
அந்த வகையில், தமிழக அரசின் பங்கான ரூ.2.50 கோடியை வழங்க தமிழ் வளர்ச்சி இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார். 1 கோடி ரூபாயில் கேரள பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும். இளங்கோவடிகள் பெயரில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.2.50 கோடி தேவை. இதை பரிசீலித்த அரசு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 1 கோடி ஒப்பளிப்பு செய்து ஆணையிடுகிறது. அதன்படி, இளங்கோவடிகள் பேரவையின் மூலம் தமிழ்-மலையாள மொழிகளின் ஒப்பீட்டு ஆய்வுகள் மற்றும் மொழிபெயர்ப்பு மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கேரள பல்கலைக்கழக இளங்கோவடிகள் இருக்கையை நேரில் சென்று ஆய்வு செய்யும்போது முழு ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விசிக பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் இந்த அறிவிப்பை எம்பி, துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.