ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்ட்டின் ஆகிய 4 இந்திய படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, 35 மீனவர்களை கடந்த 8-ம் தேதி கைது செய்தனர். செப்.18-ம் தேதி புத்தளம் நீதிமன்றம் 35 மீனவர்களுக்கு 06 மாத சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து கொழும்பு வெளிவட்ட வீதிச் சிறைச்சாலைக்கு அனுப்பியது.
கடந்த மாதம், இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் இந்தியப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, இரு நாட்டு மீனவர் பிரச்னைகள் குறித்து விவாதித்தார். இதன் அடிப்படையில் இலங்கை நீதிமன்றத்தால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை தரப்பு சம்மதம் தெரிவித்தது. இதன் அடிப்படையில், இந்த 35 பாம்பன் மீனவர்களின் அபராதத் தொகை ரத்து செய்யப்பட்டு, தண்டனை காலம் முடிவதற்குள் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், கடந்த ஜனவரி 15-ம் தேதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட மண்டபம் விசைப்படகு மீனவர்கள் 6 பேரும், பாம்பன் மீனவர்கள் 35 பேரும் என மொத்தம் 41 மீனவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு சென்னை வந்தனர். அங்கிருந்து புதன்கிழமை காலை மீனவர்கள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் தனித்தனி வாகனங்களில் பாம்பன் மற்றும் மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.