சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 11-ம் தேதி மதுரை மாநகரம், மதுரை விமான நிலையம், திருச்சி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய 5 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரனிடம் கேட்டபோது கூறியதாவது:-
காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் அடுத்தடுத்து உருவாகி வட மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதனால் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்து வருகிறது. தவிர, வழக்கமான காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வானில் மேகங்கள் உருவாவதும் குறைந்துள்ளதோடு, தமிழகத்திலும் மழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். இதற்கிடையில், தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 4 செ.மீ. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், வெட்டிகாடு, குருங்குளம், நீலகிரி மாவட்டம் தேவாலா, பந்தலூர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடை ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தை நோக்கி வீசும் மேற்குக் காற்றில் வேக வேறுபாடு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 14 (நாளை) முதல் 18-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதியில் இன்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில், நாளை முதல் 16-ம் தேதி வரை 50 கி.மீ. சூறாவளி காற்றும் அதிக வேகத்தில் வீசக்கூடும்.
எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.