தஞ்சாவூர்: மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் 100 ஸ்மார்ட் சிட்டிகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தஞ்சாவூர் மாநகராட்சியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சியில் பொது இடங்களில் 255 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நகரில் குடிநீர் வினியோகம், உடைந்த பாதாள சாக்கடை, கழிவுநீர், குப்பை தேங்குதல் போன்ற பிரச்னைகள் இருந்தால், கட்டுப்பாட்டு அறையில் உடனுக்குடன் தீர்வு காணப்படுகின்றன. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் நீர்மட்டம் கண்காணிக்கப்பட்டு, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் தணிக்கை செய்யப்பட்டு, அதன் மதிப்பீடுகள் வெளியிடப்படுகின்றன.

அதன்படி 2024-2025-ம் ஆண்டுக்கான மதிப்பீடுகள் நடத்தப்பட்டு முடிவுகள் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் தஞ்சாவூர் முதலிடமும், அகில இந்திய அளவில் 14-வது இடமும் பெற்றுள்ளது. இதற்காக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் விரைவில் விருது வழங்கவுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கூறுகையில் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா எண் 1800 425 1100 மூலமாகவும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
இதன் மூலம் தினமும் சராசரியாக 300 அழைப்புகள் வருகின்றன. இவை இரண்டு மூன்று நாட்களில் தீர்க்கப்படும். கடந்த ஓராண்டில் பெறப்பட்ட சுமார் 11 ஆயிரம் அழைப்புகளில் 80 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களால் நகரில் குற்றங்களும் குறைந்துள்ளன. தற்போது 255 கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன என்றார்.