சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. இந்தாண்டில் மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது.
கர்நாடகாவில் மழையின் தீவிரம் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை இந்தாண்டில் 2 முறை நிரம்பியது. தற்போது அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் படிப்படியாக மழை குறைந்ததால் அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீரும் குறைந்தது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 58 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து 16 கண் மதகு மற்றும் நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 27ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் தொடர்ந்து சீறிப்பாய்ந்து செல்வதால் கரையோர மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.