சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் நிலை, கட்டமைப்பு வசதிகள், நலத்திட்டங்கள் ஆகியவற்றை கண்காணிக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆசிரியர் பணியில் அலட்சியம் காட்டும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், முறையாக ஆய்வு செய்யாத அதிகாரிகளின் விவரங்களும் பொதுவெளியில் வெளியிடப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த வகையில், தருமபுரி அரூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட ராமியாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கே.பாலாஜி பணிக்கு வராமல், மாற்றுத் திறனாளியை வகுப்பு எடுக்க அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் பாலாஜி சட்டப்பிரிவு 17ன் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அதற்கு உறுதுணையாக இருந்த தலைமையாசிரியை நாகலட்சுமி வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவம் பள்ளிக் கல்வி வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல், மாநிலம் முழுவதும் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வருவதில்லை என அடிக்கடி புகார் எழுந்தது.
இதையடுத்து, பள்ளிக்கு முறையாக வராத ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலனைப் பாதுகாப்பது நமது பொறுப்பு. அதன்படி, பள்ளியில் ஆய்வின்போது, ஆசிரியர்கள் பணிக்கு வராமல் வேறு யாரேனும் பாடம் நடத்துவது தெரியவந்தாலோ, இது தொடர்பாக புகார்கள் வந்தாலோ தனி கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் உண்மை இருந்தால் மாவட்ட கல்வி அதிகாரி மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும், இதுபோன்ற தவறுகளை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கத் தவறும் தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.