சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னிந்தியாவின் தென்மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றின் சந்திப்பு உள்ளது. இந்தியப் பெருங்கடலில் பூமத்திய ரேகை மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் மார்ச் 27 முதல் 30 வரை வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 26 முதல் 28 வரை ஒரு சில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 5 செ.மீ., விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தலா 3 செ.மீ., ஈரோடு மாவட்டம் குண்டேரிபள்ளம், தஞ்சாவூரில் தலா 3 செ.மீ மழை பதிவானதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.