சென்னை: உஷ்ணமான உடலை எண்ணெய் குளியலின் மூலம் குளிரவைக்கும் முடியும். சித்தமருத்துவம் படி தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை தின ஒழுக்கம் என்கிறது. பருவநிலை மாற்றத்தால் அதிக வெயிலும், அதிக குளிரும், அதிக மழையும் என மாறும் போது அதை தாங்கி பிடிப்பது நமது உடல் தான். இந்த சருமத்தின் மீது படிந்திருக்கும் அழுக்கை வெளியேற்றிவிடலாம்.
அதை குளியல் மூலமே சோப்பு போட்டு தேய்த்து வெளியேற்றலாம். ஆனால் சருமத்துவாரங்களில் ஊடுருவி அடைப்பை உண்டாக்கிய அழுக்கை வெளியேற்றும் தன்மை எண்ணெய் குளியலுக்கு உண்டு. வளரும் பருவம் முதல் சரியான முறையில் தவறாமல் எண்ணெய் குளியல் மேற்கொண்டால் சரும பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
பாரம்பரியமிக்க தமிழ் மருத்துவத்தில் எண்ணெய் குளியலின் நன்மைகளாக சொல்வது உடல் சூடு தணியவும், ஆழ்ந்த உடல் உறக்கத்தை தருவதற்கும், சருமம் அதனோடு கூந்தலுக்கு பொலிவு தரவும், உடல் வலி நீங்கவும் எண்ணெய் குளியல் அவசியம் என்கிறது. மூட்டு வலிகள் இருப்பவர்கள் மூட்டுகளில் ஆயில் தடவி மசாஜ் செய்து குளிக்கலாம்.
காலை ஐந்து மணியிலிருந்து 7 மணிக்குள் எண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும். அதிக நேரம் ஊறவேண்டும் என்பதில்லை. 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்களுக்குள் குளிக்கவேண்டும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீர் பயன்படுத்தகூடாது. மிதமான சூடுடைய வெந்நீரில் தான் குளிக்க வேண்டும். குளித்து முடித்ததும் கூந்தலை உலர்த்த வேண்டும்.
அன்றைய தினம் அதிக காற்றோட்டமான இடங்களில் நடமாடவோ அங்கேயே இருக்கவோ கூடாது. குளிர்காற்று பட்டால் சளி பிடிக்க வாய்ப்புண்டு. அதே போன்று அதிக வெயிலிலும் சுற்றக்கூடாது. உடலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் உடல் சூடு அதிகரித்து மேலும் பாதிப்பை உண்டாக்க செய்யும்.