தூத்துக்குடி : நாடு முழுவதும் துறைமுக ஊழியர்கள் ஆகஸ்ட் 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக நடந்த துறைமுக தொழிலாளர் சம்மேளன கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.எச்.எம்.எஸ்., உள்ளிட்ட தேசிய துறைமுக தொழிலாளர் சம்மேளன கூட்டம் தூத்துக்குடி வௌி துறைமுக விருந்தினர் மாளிகையில் கடந்த 2 நாட்களாக (ஆகஸ்ட் 7, 8) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி.சிஐடியு சார்பில் அகில இந்திய துறைமுகம் மற்றும் கப்பல்துறை தொழிலாளர் சம்மேளனம் (எச்எம்எஸ்) தலைவர்கள் பி.எம்.முகமது ஹனீப், ஜி.எம்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர்கள் துறைமுகம் சத்யா, தாமஸ் செபாஸ்டியன், தாமோதரன், சுரேஷ், எஸ்.பாலகிருஷ்ணன், சிஐடியு சார்பில் ரசல், காசி, ஏஐடியுசி சார்பில் சரவணன், சீனிவாசராவ், ஐஎன்டியூசி சார்பில் பிரகாஷ்ராவ், பாலசிங்கம், ராஜ்குமார், பி.கதிர்வேல், பலராமன், ரொமால்டு, கனகராஜ், செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தொழிலாளர் விரோத போக்கு, ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை தாமதப்படுத்துதல், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை புறக்கணித்தல்,
கூட்டத்தில் போனஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்தாத நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து ஆகஸ்ட் 28ம் தேதி முதல் அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை துறைமுக தொழிலாளர் சம்மேளன கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டாக இன்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நிர்வாகிகள் கூறுகையில், ”சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை மூன்று ஆண்டுகளுக்கு முன், அதாவது 05.09.2021 அன்று நிர்வாகத்திடம் அளித்தனர். புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் 01.01.2022 முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் மூன்று ஆண்டுகளில் 7 முறை ஊதிய உயர்வு ஒப்பந்தக் குழு கூட்டங்களை நடத்தியும் இறுதி முடிவு எடுக்காமல் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இழுத்தடித்து வருகிறது.
போனஸ் ஒப்பந்தம் 15.06.2023 அன்று கையொப்பமிடப்பட்டது, ஆனால் இன்றுவரை அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் மூலம் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தொழிலாளர் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. எனவே, கடைசி முயற்சியாக ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளோம்.
இந்த வேலைநிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதனால், துறைமுகப் பணிகள் பாதிக்கப்படும். எனவே, அதற்கு முன் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த முன்வர வேண்டும்,” என்றனர்.