பக்கவாதம் என்பது திடீரென ஏற்படக்கூடிய ஓர் ஆபத்தான நரம்பியல் பாதிப்பு. ஆனால் இது வருவதற்கு முன் சில முக்கியமான முன்னறிகுறிகள் காணப்படுகின்றன. அவற்றை கவனித்தால், முன்னதாகவே மருத்துவரை அணுகி சரியான பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்வது சாத்தியம்.
முதலில், திடீரென மயக்கம் மற்றும் தலை சுற்றல் என்பது சாதாரண உடல் நிலை குறைபாடுகளால் வரும் ஒரு தோற்றமாக இருக்கலாம். ஆனால், குறிப்பாக சுற்றும் வகை தலைசுற்றல் மற்றும் சமநிலையிழப்பு ஆகியவை பக்கவாதத்தின் ஆரம்ப எச்சரிக்கைகள் ஆகும்.

அடுத்து, அடிக்கடி ஏற்படும் அதீத சோர்வு மற்றும் உடல் ஆற்றல் இல்லாமை, தினசரி வாழ்க்கையை நடத்த முடியாத நிலை, இது வேலைப்பளு அல்லது தூக்கக் குறைபாடே என நினைக்கக்கூடாது. இது கூட நரம்பியல் பாதிப்பின் அறிகுறி இருக்கலாம்.
திடீரென ஏற்படும் தாங்க முடியாத தலைவலி கூட கவனிக்க வேண்டிய ஒன்று. இதற்கு மூளையில் இரத்த ஓட்ட தடைகள் முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த நிலை மூளை அதிக அழுத்தத்தில் இருக்கிறது என அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
மரத்துப்போதல் என்பது, குறிப்பாக ஒரு பக்க உறுப்புகளில் மட்டும் ஏற்படும் உணர்விழப்பு, மிக முக்கியமான முன்னறிகுறி. இத்தகைய மரத்துபோதல் தொடர்ந்து காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.
பார்வை மங்கல், இரண்டு பொருட்கள் போல தெரிதல், ஒரு கண்ணில் மட்டும் தடுமாற்றம் ஏற்படுதல் போன்றவை பக்கவாதத்தின் ஒரு முன்னேட்டமான அறிகுறியாக அமைகின்றன.
இவற்றுடன், பேசுவதில் தடுமாற்றம், வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாமை, பேசும் போது நிறுத்தல் அல்லது புரிந்து கொள்ள இயலாமை போன்றவை மிக ஆபத்தான எச்சரிக்கைகள். இது ‘அஃபேசியா’ எனப்படும் ஒரு நரம்பியல் நிலை.
இந்த அறிகுறிகளை தொடர்ந்து அனுபவிப்பவர்கள், அதை சாதாரண காரணங்களால் வந்தது என நம்பாமல், உடனடியாக நரம்பியல் நிபுணர்களை அணுகி பரிசோதனை மேற்கொள்வது நலம். முன்னெச்சரிக்கைதான், பக்கவாதத்திலிருந்து உயிர்காக்கும் முதல் முயற்சி ஆகும்.