பழநி: தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு 2 நாள் ஆய்வுப் பயணமாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்துள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் தரிசனம் செய்தனர்.
அதன்பின், மலைக்கோயிலில் உள்ள சித்த மருத்துவ உதவி மையம், அன்னதான கூடத்துக்குச் சென்று, சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா, பக்தர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது, அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களிடம், அன்னத்தின் தரம், சுவை குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, ஒட்டன்சத்திரத்தில் உள்ள 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு மற்றும் ரெட்டியார்சத்திரத்தில் உள்ள காய்கறி மகத்துவ மையத்தை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, துணை ஆட்சியர் கிஷன்குமார், எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், அருள், சக்கரபாணி, நல்லதம்பி, மாங்குடி, மோகன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.