சென்னை: ”அமைதிப் பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் வன்முறையாளர்களால் இதுபோன்ற படுகொலைகள் நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.செல்வப்பெருந்தை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வன்முறைக் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக உள்ளது.கல்வி, தொழில் தொடங்க, சாதிக்க மிகுந்த சேவை மனப்பான்மையுடன் பாடுபட்டார். இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள பட்டியலின மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பெற்றார்.
அமைதிப் பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் இதுபோன்ற படுகொலைகள் வன்முறையாளர்களால் நடத்தப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது? – பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆம்ஸ்ட்ராங் வழக்கம் போல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் தாக்கியது. தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீசார் ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அரசியல் கட்சியின் மாநில தலைவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.