மதுரை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த பெரும் கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் முதலமைச்சர் இரவோடு இரவாக கரூருக்கு சென்று உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தவெக வழக்கறிஞர், உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரே நாளில் உடற்கூறு ஆய்வு செய்தது ஏன் என்றும், அந்த மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூறு ஆய்வு செய்யக் கூடாது என்பதே விதி. ஆனால் கரூரில் நடந்த சம்பவத்தில் அவசரமாக உடற்கூறு ஆய்வு நடைபெற்று உறவினர்களுக்கு உடல்கள் ஒப்படைக்கப்பட்டது.
சம்பவத்தில் 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர். தற்போது மருத்துவமனையில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
வழக்கறிஞர் மேலும் குற்றச்சாட்டாக, பிரச்சாரம் நடைபெற்ற இடத்தில் 500 பேர் பாதுகாப்பு பணியில் இருந்ததாக காவல்துறை கூறுவது உண்மையா என்பது சந்தேகத்துடன் இருப்பதாகவும், இது சம்பவத்தின் பின்னணியில் விசாரணை தேவை எனக் குறிப்பிட்டுள்ளார்.