கும்பகோணம்: வன்னியர் சங்கம் சார்பில், சோழமண்டல மத – சமுதாய நல்லிணக்க மாநாடு தாராசுரத்தில் நேற்று நடந்தது. மாநாட்டுக் குழுத் தலைவர் ம.க. ஸ்டாலின் வரவேற்றார். வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஜி.கே. மணி வாழ்த்துரை வழங்கினார். இதுகுறித்து பாமக மாநில தலைவர் அன்புமணி பேசியதாவது:- வறுமை, அறியாமை, மதுவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழகத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அனைத்து பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என பொய்யான தகவலை பரப்பி வருகிறார். எனவே, வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். இந்த விஷயத்தில் எங்களது போராட்டங்களை சிறுமைப்படுத்த வேண்டாம். சாதியை வைத்து அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள 364 ஜாதிகளும் முன்னேறினால்தான் தமிழகம் முன்னேறும். ஏற்றத்தாழ்வுகளை அகற்ற ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கடன் உதவித் திட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் 3 முறை ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு இருந்தும், சிலரின் சதியால் அது நடக்கவில்லை. ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? தமிழகத்தில் 6.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பை உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக மக்கள் இன்னும் தெளிவான புரிதலுக்கு வரவில்லை. 2026 தேர்தலின் போது தெளிவு வரும். மது இல்லாவிட்டால் வேலைவாய்ப்பு பெருகும், சமூக நல்லிணக்கம் பெருகும். இவ்வாறு பேசினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதி. விமல் நன்றியுரையாற்றினார்.