சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மார்ச் மாதம் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயிலை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே பயணம் செய்ய 95 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த ரயிலின் சோதனை ஓட்டம் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேக்கு இரண்டு குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில்களுக்கான பெட்டிகளை ICF வழங்கும். மதுரை – போடிநாயக்கனூர் ரயில்களின் நேரம் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மாற்றப்படுகிறது. மதுரையில் இருந்து பிப்ரவரி 10-ம் தேதி காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 10.20 மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடையும். மற்றொரு திசையில் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாலை 6 மணிக்கு போடிநாயக்கனூரில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரை சென்றடையும்.

கன்னியாகுமரி – புனலூர் ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் செய்யப்பட்டு, சோதனை அடிப்படையில் பரவூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். மத்திய சிறுபான்மையினர் விவகாரம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், நிறுத்தத்தை துவக்கி வைக்கிறார். புனலூர் – கன்னியாகுமரி பயணிகள் ரயில் எண் 56705/56706 சோதனை அடிப்படையில் பரவூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிப்ரவரி 8, 2025 முதல் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் சேவைகளும், பிப்ரவரி 9, 2025 முதல் புனலூரில் இருந்து புறப்படும் சேவைகளும் பரவூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.