ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 35 பேருக்கு செப்டம்பர் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 8ம் தேதி ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்ட்டின் ஆகியோருக்கு சொந்தமான 4 நாட்டு படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 35 மீனவர்களை கைது செய்தனர். 35 மீனவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் புத்தளம் வாரியபொல சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களுடன் தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில், பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 35 பேர் புதன்கிழமை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விமானே விமலரத்ன, 35 மீனவர்களின் காவலை இரண்டாவது முறையாக செப்டம்பர் 4ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.இதையடுத்து மீனவர்கள் மீண்டும் வாரியபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.