மாமல்லபுரம்: தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலுக்கு வருகை ஒரு மோசமான ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வழிவகுத்தது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டல்கள், ஓய்வு விடுதிகள், பண்ணை வீடுகளில் ஏராளமானோர் தங்கி ஆங்கில புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டும் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று இரவு முதலே ஏராளமான வாகனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அனைத்து ஹோட்டல்களும், ஓய்வு விடுதிகளும் வண்ண விளக்குகளால் ஜொலித்திருந்தன. இசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் 10-க்கும் மேற்பட்ட தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாமல்லபுரம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டலில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் கடற்கரையில் இசை கச்சேரி மற்றும் கேக் வெட்டும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் நேற்று இரவு ஆங்கில புத்தாண்டு பிறப்பை கொண்டாட மேடை அமைக்கப்பட்டது. இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று மாலை 6 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலுக்கு குடும்பத்துடன் வந்து இரவு 9 மணிக்கு குடும்பத்துடன் சென்னை திரும்பினார். இதனால் தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. நள்ளிரவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடும் வகையில் கடற்கரையில் போடப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட நாற்காலிகளில் சில சுற்றுலாப் பயணிகள் மட்டும் அமர்ந்திருந்தனர்.
மற்ற இருக்கைகள் காலியாக இருந்தன. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் சுற்றுலா பயணிகள் இன்றி நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்து சூரிய உதயத்தை கண்டு களித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.