ஊட்டி: ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற காரை காட்டு யானை துரத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை வளைவுகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த மலைப்பாதையில் காட்டு யானைகள் அதிகளவில் உள்ளன.

இந்த மலைப்பாதையில் கடந்த 2 நாட்களாக ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிகிறது. இதனால், மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் 4 பேர் காரில் ஊட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். 35-வது கொண்டை வளைவில் வந்தபோது, எதிரே வந்த ஒற்றை காட்டு யானை காரை துரத்தியது.
இதனால் சுற்றுலா பயணிகள் காரை வேகமாக திருப்பி மசினகுடி நோக்கி திரும்பினர். சாலையில் முகாமிட்டிருந்த காரை காட்டு யானை துரத்தியதால் மலைப்பாதையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் மசினகுடி நோக்கி திரும்பின. காட்டு யானை காரை துரத்தும் காட்சியை காரில் இருந்த சுற்றுலா பயணிகள் செல்போனில் பதிவு செய்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.