சென்னை: தமிழ்நாடு என்றாலும் தமிழர்கள் என்றாலும் முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது அவர்களின் பாரம்பரிய ஆடையான புடவைகள்தான். புடவைகளை தங்களுடைய கலாச்சார அணிகலனாக மாற்றியவர்கள் தமிழர்கள். தமிழகத்து புடவைகளில் பல வெரைட்டிகள் இருக்கின்றன. அதில் சிலவற்றை பார்ப்போம்.
காஞ்சிவரம் சில்க் புடவைகள்
இந்த வகைப் புடவைகள் இந்தியாவுக்கே பெருமை தேடித் தருபவை. வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு ஏற்றுமதி ஆவதிலும் முதலிடத்தை பிடித்திருக்கும் காஞ்சிவரம் பட்டுப் புடவைகள் நமது தமிழகத்தில் உள்ள காஞ்சிவரம் எனும் ஊரில் தயார் ஆகிறது. பல கை வேலைப்பாடுகள், கலைநுணுக்கங்கள் கொண்ட புடவைகள் இந்தியாவின் பெருமை.
ராசிபுரம் புடவைகள்
ராசிபுரம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். அங்கே கைத்தறி நெசவுகளும் பட்டுத்தறிகளும் தான் குலத்தொழில். நிறைய நெசவாளர்களை தன்னகத்தே கொண்ட ஊரில் கைத்தறி புடவைகளில் நெசவாளர்களின் கைவண்ணம் நம்மை ஆச்சரியப்படுத்தும். பட்டுபுடவைகளிலும் காஞ்சிவரம் புடவைக்கு நிகரான தரத்தை இவர்கள் வழங்குகிறார்கள்.
டிசைனர் புடவைகள்
கலாச்சாரம் வளர வளர புடவை நெசவுகளில் புதுமை புகுத்துவது எல்லா நாடுகளிலும் வழக்கம். ஆகவே அதற்காகவே டிசைனர் புடவைகள் தயார் ஆனது. எம்ப்ராய்டரி முதல் கண்ணாடி வேலைப்பாடுகள் வரை கலையின் கைவண்ணத்தை புடவையில் காட்டினார்கள். மனித கற்பனை திறனையும் அவர்கள் உழைப்பையும் நேரத்தையும் இந்த டிசைனர் புடவைகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் அதிக விலை தர வேண்டி இருக்கிறது. ஆனாலும் அணிபவரை அழகாக்கும் அற்புதம் வாய்ந்தது.
கோவை பருத்தி புடவைகள்
கோவை காட்டன் புடவைகள் எப்போதுமே தனி சிறப்பு வாய்ந்தவை. அணிந்து கொள்ள மிருதுவாகவும் சருமத்திற்கு நண்பனாகவும் இருக்கும் இந்தப் புடவைகளின் தரம் பல வருடங்களுக்கு நிலைக்கும் . தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் பருத்தி உற்பத்தி ஆகிறது என்பது சிறப்பு செய்தி. உற்பத்தி ஆகும் இடத்திலேயே தயாரிக்கப்படும் புடவைகள் தரத்திற்கான உத்தரவாதம் மற்றும் விலை மலிவு ஆகியவற்றை குறிப்பிடுகிறது.
நெகமம் புடவைகள்
பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமத்தில் தான் தமிழகமெங்கும் உள்ள ஆடைக் கடைகளுக்கு புடவைகள் தயார் ஆகின்றன. இங்கே விற்கப்படும் கிராமத்து பருத்தி புடவைகள் மற்றும் அதன் தனித்துவமான டிசைன் பெரியவர்கள் அணிய மிருதுவாக இருக்கும் தன்மை ஆகியவையால் புடவைகள் என்றால் நெகமம் புடவைகளை நாம் தவற விட முடியாது.