சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மேலும் பலத்த மேற்பரப்பு காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் மாநிலத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் தளுவாயில் 6 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செ.மீ., நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, நீலகிரி மாவட்டம் மடுதம், மேல் கூடலூர், கூடலூர் மார்க்கெட், சேலம் மாவட்டம் சந்தியூர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கோவை மாவட்டம் சின்சோனா ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 4ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.