திருச்சி: திருச்சி மாவட்ட மூன்றாவது திட்டக்குழு கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட திட்டக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் மற்றும் மாவட்ட திட்டக்குழு தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம், முன்னேற்றத்தை நாடும் வட்டார திட்டம் மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம் (ஜல் ஜீவன் மிஷன்), முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், மேலும், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், முடிவுற்ற பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும், பணிகள் நிலுவையில் உள்ளதற்கான காரணங்கள் குறித்தும், விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது…. திட்டக்குழுவின் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் பற்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். திட்டக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை நிறைவேற்றுவதற்கான சிறப்பு அறிக்கை தயார் செய்திட அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். ஒன்றியக்குழு தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட அனைத்து துறை பணிகள் மற்றும் தேவைகள் குறித்து ஆய்ந்தறிந்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட ஊராட்சி செயலாளர் சுரேஷ், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.