சென்னை: டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படும் என்று எஸ்.கே.பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் புதிய டி.என்.பி.எஸ்.சி.தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் முறையாக நடத்தப்படும். தேர்வுக்கு பிறகு முடிவுகள் உடனடியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பணிகளில் சேர வேண்டும் என்ற கனவோடு ஏராளமானவர்கள் அரசு தேர்வுகளை எழுதி வருகி றார்கள். அதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம் கால அட்டவணை தயாரித்து நடத்தி வருகிறது.
இந்த தேர்வுகளை நேர்மையாக நடத்த தலைவர் என்ற முறையில் நான் உறுதியளிக்கிறேன். தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெரிய புகார்கள் இல்லாமல் தரமான முறையில் அரசு தேர்வுகள் நடத்தி வருகிறது. இதை மேம்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.