
புவனகிரி: விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிறது. இப்பணி 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கடலூர் மாவட்டம் பூண்டியாங்குப்பம் கிராமம் முதல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் வரை ஒவ்வொரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளதால், இவ்வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம்-கடலூர் பிரதான சாலை செல்கிறது. சிதம்பரம்-கடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலம், ரயில்வே பாலங்கள், ஆற்றுப் பாலங்கள் உள்ளிட்ட பல பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. புவனகிரி அருகே கொத்தட்டை கிராமத்தில் உள்ள இந்த சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டாலும், இதுவரை சுங்கச்சாவடி முறையாக திறக்கப்படாததால், சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதனால் இந்த சுங்கச்சாவடி வழியாக ஏராளமான வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றன. இந்நிலையில், கடலூர் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கொத்தட்டையில் உள்ள சுங்கச்சாவடியில் வரும் 23-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொத்தட்டையில் உள்ள சுங்கச்சாவடியில் உள்ள டிஜிட்டல் போர்டில் வரும் 23-ம் தேதி முதல் சுங்கச்சாவடி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், அதே நேரத்தில், நாகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நாளிதழில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில், எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 23-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் இந்த இடத்தில் எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விவரம் எழுதப்படும் என தெரிகிறது.