இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பூமத்திய ரேகைக்கு உட்பட்ட வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் 11-ம் தேதியும், 12, 13-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 14 மற்றும் 15-ம் தேதிகளில் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும். வரும் 11-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இன்று ஒரு சில இடங்களில் இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் பூமத்திய ரேகை மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்றும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.