பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தில் நெம்மாறைக்கு அடுத்தபடியாக நெல்லியாம்பதி சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக நெம்மாறை – நெல்லியாம்பதி – நெம்மாரா வனச் சாலையில் பெண் காட்டு யானை ஒன்று தனது குட்டியுடன் சாலையோரம் உலா வந்தது. இந்த யானையை சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அமர்ந்து செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த வழித்தடத்தில் அடிக்கடி காட்டு யானைகள் அதிகளவில் நடமாடுகின்றன. மேலும், சிறுத்தைகள், காட்டு மாடுகள், புள்ளிமான்கள், கடமான்கள், குரங்குகள், சிங்கவால் குரங்குகள், மயில்கள் போன்றவையும் உள்ளன. அவர்கள் காலையிலும் மாலையிலும் அடிக்கடி காணலாம். நெல்லியம்பதி சுற்றுலா தலத்தில் உள்ள தேயிலை, காபி, மிளகு, ரப்பர், ஆரஞ்சு, காலிஃபிளவர் மற்றும் பாசிப்பயறு தோட்டங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு அழகிய காட்சியை அளிக்கிறது.

மேலும், சீதாராம் மலை, மலை அருவிகள், போத்துப்பாறை, வியூ பாயின்ட், போத்துண்டி அணைக் காட்சி முனை போன்றவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும். நெம்மாராவில் இருந்து செல்லும் போது, போத்துண்டி அணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது. இதனை ரசித்துக் கொண்டே சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இதையடுத்து அதே வழித்தடத்தில் போத்துண்டி பகுதியில் வனத்துறையின் சோதனை சாவடி அமைந்துள்ளது.
இங்கு வனத்துறையினர் வாகனங்களை சோதனையிட்ட பிறகே, மலைப்பாதையில் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. காட்டுப்பாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும், வன சாலையில் வன விலங்குகளை துன்புறுத்த வேண்டாம் என வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை எச்சரித்தும், அறிவுறுத்தி வருகின்றனர்.