உடுமலை : உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்து, பஞ்சலிங்க அருவியில் நீராடுகின்றனர். திருமூர்த்தி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அருகில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி மூடப்பட்டுள்ளதால், சாலையோரம் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்.
பூங்காவின் நுழைவாயிலில் பல ஆண்டுகளாக ஒரு காளை சிலை இருந்தது. திருமூர்த்தி அணை பின்னணியில் அழகாக காட்சியளிக்கிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் காளை மாடு சிலை முன் நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து வந்தனர். இந்நிலையில் அந்த காளை மாடு சிலை திடீரென மாயமாகியுள்ளது. பொதுப்பணித்துறையினர் சிலையை அகற்றியதாக தெரிகிறது. காளை சிலை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.