திருப்பத்தூர்: திருப்பத்தூரை அடுத்த ஏலகிரிமலை அடிவாரத்தில் உள்ள ஜலகம்பாறை அருவி சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
மேலும், இங்கு பிரசித்தி பெற்ற லிங்க வடிவ முருகன் கோவில் உள்ளது. இந்நிலையில், ஜலகம்பாறை அருவியில் நீராடி, முருகப்பெருமானை தரிசிக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மேலும், அங்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கிற்காக ரூ.2 கோடி மதிப்பில் வனத்துறை சார்பில் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஜலகம்பாறை அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், விவசாயிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.