தண்டராம்பட்டு: சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இந்த அணை பொன்விழா சிறப்பு வாய்ந்தது. அழகிய மலர் தோட்டங்கள், குழந்தைகள் விளையாடும் வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலை பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் பல அம்சங்களை கொண்டுள்ளது.
எனவே சாத்தனூர் அணைக்கு திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமானோர் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சாத்தனூர் அணையை பார்வையிட ஏராளமானோர் குவிந்தனர். அங்குள்ள ஆடம் அண்ட் ஈவ் பூங்கா, தொங்கு பாலம், காந்தி மண்டபம், அறிவியல் பூங்கா, டைனோசர் பூங்கா, முதலைப் பண்ணை, பறவைக் கூண்டு, வண்ண மீன் கண்காட்சி ஆகியவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

மேலும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்கி குடும்பத்துடன் சமைத்து மகிழ்ந்தனர். இந்நிலையில் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக வலது மற்றும் இடது கால்வாய்கள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 520 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நேற்று சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 98.60 அடியாக உள்ளது.