உதகை: நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் செர்ரி மலர்கள் பூத்துள்ளதால், இதைச் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, மஞ்சூர், கைகாட்டி, குன்னூர், கோத்தகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் ஒரு சில இடங்களில் செர்ரி மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மரங்களில் வழக்கமாக நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் ஆரம்பிக்கும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செர்ரி பூத்துக் குலுங்கும். மேலும் ஜனவரி மாதம் வரை இந்த பூக்களை சாலையோரம் காணலாம்.
இந்நிலையில், இந்த ஆண்டு சற்று முன்னதாக ஆகஸ்ட் மாதத்திலேயே பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. இந்த பூக்களை அந்த வழியாக செல்லும் உள்ளூர் மக்கள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். மேலும் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். பொதுவாக இந்த பூக்கள் குளிர் அதிகமாக நிலவும் இடங்கள், குறிப்பாக சதுப்பு நிலங்கள் மற்றும் நீரோடைகளின் அருகே இந்த மரங்கள் அதிகளவு காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மரங்கள் மற்றும் அழகு செடிகள் உட்பட்ட தாவரங்களை நீலகிரி மாவட்டத்துக்கு கொண்டு வந்து பயிரிட்டனர். ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் நிலவும் காலநிலை இங்கும் நிலவுவதால், அந்த நாடுகளில் காணப்படும் மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர்கள் அதிகளவு இங்கு கொண்டு வந்து நடவு செய்யப்பட்டது.
ஜப்பான் நாட்டின் தேசிய மலரான ‘செர்ரி’ மரங்கள் இந்த வகையில் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்தது. வசந்த காலத்தை வரவேற்கும் மலர்கள் என்பதால், ஜப்பான் நாட்டில் இந்த மலர் தேசிய மலராக இருந்து வருகிறது. ஜப்பானில், செர்ரி மலருக்கு ஆழமான கலாச்சார முக்கியத்துவம் உள்ளது. இந்த பூக்கள் அழகிற்காக மட்டும் ரசிக்கப்படவில்லை. செர்ரி மரங்கள் பூ பூக்கும் போது, மக்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பூக்களைப் பார்க்க வருவர். உணவு, பானம், இசையுடன் ‘ஹனாமி’ எனும் பண்டிகையைக் கொண்டாடுவர்.
அதாவது பூக்களைப் போல மனிதரின் வாழ்க்கையும் குறுகியது என்பதையும், எனவே வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தையும் அது குறிக்கிறது.இதேபோல் 1912-ம் ஆண்டில், ஜப்பானால் அமெரிக்காவிற்கு ஆயிரக்கணக்கான செர்ரி மரங்கள் பரிசளிக்கப்பட்டன. அதை நினைவுகூரும் வகையில், அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும், 1.5 மில்லியன் மக்கள் வாஷிங்டனில் செர்ரி மலர் திருவிழாவில் கலந்துகொள்வர். சீனாவின் வசந்த காலத்தில் ஜியூஷாங்கோவ் உள்பட பல்வேறு ஊர்களில் செவி மலர்கள் பூத்துக் குலுங்குவது வரவேற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.