ஊட்டி: புனித வெள்ளி, ஈஸ்டர் போன்ற தொடர் விடுமுறையால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலால் மக்கள் அவதிப்படுகின்றனர். வெயிலை சமாளிக்க, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பொதுமக்கள் குவிய துவங்கியுள்ளனர். மேலும், தொடர் விடுமுறையால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
ஊட்டி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் நேற்று சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஊட்டியில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் ஊட்டியின் இதமான சூழலை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளியில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல், படப்பிடிப்பு தளம், பைக்காரா படகு இல்லம் மற்றும் நகருக்கு வெளியே உள்ள கெய்ர்ன்ஹில் வனப்பகுதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி அருகே தொட்டபெட்டா மலை உச்சி கடல் மட்டத்தில் இருந்து 2,636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நுழைவுக் கட்டணம் இங்கு செல்ல ஒரு நபருக்கு ரூ. 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்த இடம் உள்ளது.
அங்குள்ள டெலஸ்கோப் ஹவுஸ், குன்னூர் நகரம், வெலிங்டன், கோயம்புத்தூர், கேத்தி பள்ளத்தாக்கு, ஊட்டி நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை, முகூர்த்தி அணை உள்ளிட்ட இடங்களை நவீன தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும். தொட்டபெட்டா சிகரத்தில் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. இங்குள்ள காட்சி கோபுரத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் மற்ற பகுதிகளை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். சுற்றுலா பயணிகள் மலை உச்சி மற்றும் பாறைகளில் நின்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர், நீலகிரி மாவட்டத்தில் விளைந்த பழங்கள், மலை காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ஊட்டி – குன்னூர், ஊட்டி – கோத்தகிரி, ஊட்டி – கூடலூர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.