சென்னை: இது தொடர்பாக, அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியது: 2021-23 காலகட்டத்தில் 45,800 மின்மாற்றிகளை வாங்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.1,183 கோடி மதிப்புள்ள டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊழல் தடுப்புத் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த மோசடியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் பலர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதால், உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘இந்த வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள ஊழல் தடுப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.