மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 4 மாதங்களில் வறண்ட சீசன் நிலவும். இந்த நேரத்தில், பல கடல்வாழ் உயிரினங்கள் வறண்ட காலத்தின் காரணமாக அடிக்கடி இறந்து கரை ஒதுங்குகின்றன. இந்நிலையில் நேற்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள தனியார் ரிசார்ட் அருகே 5 கிலோ எடையுள்ள 10-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் பல்வேறு இடங்களில் கரை ஒதுங்கியது.
இதனால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கியதால் கடலோர பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 4 மாதங்களில் கடல் வறண்டு காணப்படும். அப்போது கடலில் கலக்கும் நச்சுக் கழிவுகள், கடலில் கலக்கும் குப்பைகள், வெளியேறும் எண்ணெய்க் கழிவுகள் ஆகியவற்றில் அதிக அளவு நச்சுத்தன்மை இருப்பதால் ஏராளமான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவதாகக் கூறப்படுகிறது.