சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள லால்பேட்டையில் இருந்து பூதங்குடி பகுதி வரை வீராணம் ஏரி நீண்டுள்ளது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரமாக விளங்கும் இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து செங்காலோடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக மழைக்காலத்தில் தண்ணீர் வருகிறது.
இந்த ஏரியின் மூலம் 44,856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சென்னை மக்களின் தாகத்தையும் தீர்க்கிறது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி பருவமழை பெய்ததால் ஏரியை பாதுகாக்க வெள்ளியங்கால் ஓடை மற்றும் வீராணம் வடக்கு வாய்க்கால் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு, ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில் தற்போது கொள்ளிடம் வடக்கு ஓடையில் தேங்கியுள்ள மழைநீரால் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, கடல் போல் காட்சியளிக்கும் ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.