சென்னை: எனது வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புதான் முக்கிய காரணம் என்று தனது 75வது பிறந்தநாளில் பேசிய வெங்கையா நாயுடு கூறினார். முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்தநாளும், பொது வாழ்வில் 50 ஆண்டுகள் ஆனதையும் முன்னிட்டு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பாராட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வெங்கையா நாயுடுவின் மகள் தீபா தலைமை வகித்தார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஐஜேகே நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, திமுக வழக்கறிஞர் வில்சன் எம்.பி., தொழிலதிபர். நல்லி குப்புசாமி, நடிகர் விஷால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை குறித்த சிறப்பு காணொளி திரையிடப்பட்டது.
பின்னர் பிரதமர் மோடி வெளியிட்ட வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வெங்கையா நாயுடு வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: எனக்கும் சென்னைக்கும் எப்போதும் தனிப்பட்ட பந்தம் உண்டு. இங்குள்ள தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறைகளை நான் எப்போதும் விரும்பினேன். உலகின் பழமையான மொழி தமிழ். அப்படிப்பட்ட தமிழ் மொழிக்கு உரிய மரியாதை கொடுத்து வருகிறேன். நான் எனது அரசியல் வாழ்க்கையை மாணவனாகத் தொடங்கினேன். குறிப்பாக, 14 வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தேன்.என் வளர்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் தான் முக்கிய காரணம்.
அதன்பின், 18 வயதில், அக்கட்சியின் மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி.,யில் சேர்ந்தேன்.இதன் மூலம், தலைமைத்துவ திறமையை கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் ஒரு நாள் நெல்லையில் வாஜ்பாயுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, மேடையில் பேசிய வாஜ்பாய், “ஒரு நாள் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஆவீர்கள்” என்றார். அதேபோல் நானும் தலைவன் ஆனேன். ஆரம்பத்தில் வழக்கறிஞராக இருந்த நான் பின்னர் பாஜகவில் சேர்ந்தேன். இப்போது கட்சி என்னை இந்த இடத்திற்கு அழைத்துச் சென்று நிறுத்தியுள்ளது.
இந்தியா உலகின் விஸ்வ குருவாக மாற, இந்தியர்கள், குறிப்பாக இளைஞர்கள் கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அதை நான் பின்பற்றியதால் தான் இவ்வளவு வளர்ந்தேன். மேலும், இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கும் நமது பொருளாதாரம் விரைவில் மூன்றாவது இடத்திற்கு வரும். மேலும் நாடாளுமன்றம் என்பது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஆரோக்கியமான விவாதம் செய்து சட்டங்களை இயற்றுவதற்கு மட்டுமே. கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தும் இடம் அல்ல. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் வெங்கையா நாயுடுவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.