நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். இதனால், இரு மாவட்டங்களுக்கும், ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக வால்பாறையில், 31 செ.மீ., மழையும், சின்னக்கல்லாறு, 24; சின்கோனா, விண்ட் வொர்த் எஸ்டேட், 23; பந்தலுார், தேவாலா, 20; சோலையாற்றிலும், 19 செ.மீ., மழை பெய்துள்ளது.
அவலாஞ்சி, மேல்கூடலூர், 17; மேல்பவானி, 10; சிறுவாணி, 9; பொள்ளாச்சி, பெரியார், 8; அலியார், 6; மாஞ்சோலை, 5; செங்கோட்டை, பேச்சிப்பாறை, 4; குளித்துறை, போடியில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
உடுமலை – மூணாறு மார்க்கத்தில், நேற்று காலை நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் சாலையில் எட்டாவது மைல் உட்பட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
உடுமலையில் இருந்து, கையூர், மூணாறு செல்லும் பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. சாலையில் விழுந்து கிடந்த பாறை, மண்ணை கேரள மாநில அதிகாரிகள் அகற்றியதையடுத்து, பகல் 12:00 மணிக்கு மேல் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின.