சென்னை: நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அவர் பேசிய “சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வரும்” என்ற வசனம் இன்னும் அரசியல் மேடைகளில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த மாநாட்டின் வெற்றிக்குப் பிறகு, தற்போது விஜய்யின் கடைசி படமாகக் கருதப்படும் ஜனநாயகன் பற்றிய செய்தி சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், விஜய்யின் சினிமா வாழ்க்கையின் கடைசி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கான சம்பளம் மட்டும் ரூ.275 கோடியைத் தாண்டும் என கூறப்படுகிறது. தெலுங்கில் வெளியான பகவந் கேசரி படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. படத்தின் போஸ்டர் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் வந்துள்ளதால், இது முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் அமைந்த படம் என்பதே ரசிகர்களின் நம்பிக்கை.
பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய் அரசியலில் இறங்கிய பின், அவர் நடிக்கும் அரசியல் சார்ந்த படத்தை பார்க்க ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் நிலவுகிறது.
இதற்கிடையில், ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தயாரிப்பாளர்கள் மலேசியாவில் கிறிஸ்துமஸ் தினத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். விஜய்யின் கடைசி படமாக இருப்பதால், 20க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்க அழைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, அஜித், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களும் அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி மற்றும் கமல் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், சூர்யா மற்றும் அஜித் வருவார்களோ என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தனுஷ், சிம்பு ஆகியோர் நிச்சயமாக பங்கேற்பார்கள் என வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிகழ்ச்சி நடந்தால், அது இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய விழாவாகப் போகிறது. விஜயின் அரசியல் வருகைக்கும், சினிமா பயணத்திற்கும் இடையிலான பாலமாக இந்த ஆடியோ வெளியீடு அமையும். மேலும், படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பாக்ஸ் ஆபிஸில் சாதனையையும் உருவாக்கும் என கணிக்கப்படுகிறது.