ராமேஸ்வரம்: ஜனவரி மாதம் முதல் இதுவரை 18 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்களும், புதுச்சேரியில் உள்ள காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்களும் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், பிப்., 24-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் மீனவர் சங்க தலைவர்கள் சகாயம், சேசுராஜா, தேவதாஸ், எமரிட், ராயப்பன் மற்றும் திரளான மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மேலும், அதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வைகை பாசன விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்நிலையில், அழைப்பின் பேரில் கூடிய மீனவர் சங்க பிரதிநிதிகளிடம், போராட்டத்தை கைவிடும்படி கலெக்டர் கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்கு சம்மதிக்காத மீனவர் சங்கப் பிரதிநிதிகள் போராட்டத்தைத் தொடரப் போவதாகக் கூறி கலைந்து சென்றனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.