சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதில், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாக உள்ளது. மேலும், ஆண்டுக்கு 15 நாள் விடுப்பு சரணடைதல் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துதல், பணிக்கொடையை உயர்த்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல் ஆகியவை அவர்களது கோரிக்கைகளாகும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அல்லது போராட்டத்தில் பங்கேற்பதால், அரசு அலுவலகங்களின் இயல்பு செயல்பாடு பாதிக்கப்படும் என்பதால், அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுதி நேர பணியாளர்கள், தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊதியம் பெறுபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.