சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில், உடுமலை மாவட்டத்தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகி உள்ளது. அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அமராவதி அணையில் இருந்து எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பஞ்சலிங்க அருவிகளுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல அங்குள்ள கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பொதுப்பணித்துறை, வனத்துறை, கோவில் நிர்வாகத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,929 கன அடியில் இருந்து 18,094 கன அடியாக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து தண்ணீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.