சென்னை: கோடை காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் உயர தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு, தனியார் நிறுவனங்களுக்கு என பல வலியுறுத்தல்களை வழங்கி கொண்டு வருகின்றனர். மதிய வேளையில் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் , வெயிலின் தாக்கத்தை கொண்டு வேலை நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் நிறுவனங்களுக்கும் அரசு வலியுறுத்தியுள்ளது.
வெயிலின் தாக்கத்தை தணிக்கவும், வெயிலின் பாதிப்பில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுரைகளை இங்கே பார்க்கலாம்
அதன்படி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? : – மருத்துவ காரண கட்டுப்பாடுகள் இல்லாத நபர்கள் சராசரியாக ஒவ்வொரு நாளும் 3 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இருப்பினும், வெளியில் அதிக நேரம் செலவிடுபவர்கள் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். உடல்நல பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்கள் மருத்துவர் அனுமதிக்கும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். சராசரியாக, 20 கிலோ எடையுள்ள ஆரோக்கியமான குழந்தை 1 நாளைக்கு 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.குளிர்பானங்களை குடிப்பது நல்லதல்ல, ஏனெனில் அவைகளில் அதிக சர்க்கரை உள்ளதால் குறைவான அளவே நாம் அருந்துவோம். அது உடலில் நீர் இழப்பை நிரப்ப உதவாது.
நடைப்பயிற்சி : – நாள் வெப்பநிலை உயரத் தொடங்கும் முன் காலை நடைப்பயிற்சியை முடித்து கொள்ள வேண்டும். ஆனால் இது சூரிய உதயத்திற்கு முன் செய்யப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. இருப்பினும், தற்போதைய நிலையில், காலை நடைப்பயிற்சி மிதமானதாக இருக்க வேண்டும், வழக்கத்தை விட குறைவான நடைப்பயிற்சி செய்ய வேண்டும். குடிநீர் கட்டுப்பாடுகள் உள்ளவர்கள் இக்கோடை காலத்தில் காலை நடைப்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.