கோவை: கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், புனே மற்றும் கோவா போன்ற உள்நாட்டுப் பகுதிகளுக்கு 29 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், சிங்கப்பூருக்கு 2 விமானங்களும், ஷார்ஜாவுக்கு வாரத்திற்கு 5 முறையும், அபுதாபிக்கு வாரத்திற்கு 3 முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தற்போது உள்நாட்டு விமானங்களில் மொத்தம் 10,500 பேரும், சர்வதேச விமானங்களில் மொத்தம் 1,530 பேரும் தினமும் பயணம் செய்வதற்கான வசதிகள் உள்ளன.
இதற்கிடையில், சர்வதேச விமான சேவைகளை அதிகரிக்க விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டிசம்பர் 1ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கோவை விமான நிலையத்திற்கு 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்துள்ளனர். இந்நிலையில், பயணிகளின் வசதிக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் கோவை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கொங்கு குளோபல் ஃபோரம் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, கூட்டமைப்பின் இயக்குனர் சதீஷ் கூறுகையில், ”கோவை விமான நிலையத்திற்கு தினமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கடந்த 15 நாட்களில் 1.50 லட்சம் பயணிகள் வந்துள்ளனர். கோவை விமான நிலையம் இந்த மாதம் 3 லட்சம் பயணிகளை கையாளும் இலக்கை எட்ட வாய்ப்பு உள்ளது. தொழில் நகரமான கோவையில் உள்ள விமான நிலைய முனையத்தை மேம்படுத்த விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏர் இந்தியா டெல்லிக்கு காலை விமானத்தை தொடங்க வேண்டும். புனேவுக்கு இண்டிகோ கூடுதல் விமானத்தை இயக்க வேண்டும். அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவிற்கு புதிய விமானங்கள் தொடங்கப்பட வேண்டும். கோவை விமான நிலையத்தில் இருந்து தோஹா, கொழும்பு, பாங்காக், துபாய், கொல்லம் ஆகிய நகரங்களுக்கு வெளிநாட்டு விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விமான நிலைய ஆணையம் மற்றும் விமான நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
விமான நிலையம் ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு வசதி. கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியுள்ளது. விமான நிலைய ஆணையம் தேவையான அனுமதிகளை விரைந்து பெற்று விரிவாக்கப் பணிகளை தொடங்க வேண்டும். இதை செய்தால் பல வெளிநாடுகளில் இருந்து புதிய விமானங்கள் வரும். முதலீடுகள் அதிகரித்து வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மக்கள் பல இடங்களுக்கு விரைவாகச் செல்ல முடியும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.