தேனி: தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் விலை கிடைப்பதால், தேனி மாவட்ட விவசாயிகள் பலர், வெங்காயத்தை பாதுகாக்க சிறு குடிசை அமைத்து வருகின்றனர். சைவம் மற்றும் அசைவ உணவுகளில் வெங்காயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆண்டு முழுவதும் வெங்காயத்தின் தேவை அதிகரித்து வருவதால், ஏராளமான விவசாயிகள், வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தை பொறுத்த வரை கொடுவிலார்பட்டி, கோபாலபுரம், பாலகிருஷ்ணாபுரம், ஓவுலாபுரம், கோட்டூர், சீலையம்பட்டி, ஆண்டிபட்டி போன்ற பகுதிகளில் வெங்காய சாகுபடி நடந்து வருகிறது. 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. வெங்காயத்தின் தேவை அதிகரித்து வருவதால், வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் பலர் கடந்த சில வாரங்களுக்கு முன் அறுவடை செய்த வெங்காயத்தை விற்பனை செய்யவில்லை. அவர்கள் தங்கள் விவசாய நிலங்களின் ஒரு பகுதியில் பண்டல்கள் எனப்படும் சிறிய குடிசைகளில் அவற்றை வைத்திருக்கிறார்கள். வெங்காயம் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் மூங்கில் கம்புகளைச் சுற்றி வலையில் சேமிக்கப்படுகிறது.
மழைநீர் உள்ளே செல்லாமல் இருக்க மேல்பகுதியில் தார்பாய் போடப்பட்டுள்ளது. காற்று உள்ளேயும் வெளியேயும் செல்ல அனுமதிக்கப்படுகிறது, வெங்காயம் வாரக்கணக்கில் அழுகாமல் இருக்கும். இதுகுறித்து கோபாலபுரத்தைச் சேர்ந்த விவசாயி சங்கர்ராஜ் கூறுகையில், ‘வெங்காயம் 90 நாள் பயிராகும்.
அறுவடை முடிந்து விற்பனை செய்தால் சரியான விலை கிடைப்பதில்லை. தீபாவளிக்கு இதன் விலை பல மடங்கு உயரும். அதனால் வெங்காயத்தை தோல் நீக்காமல் சேமித்து வைக்கிறோம். தேவைப்பட்டால் இதை விதையாக பயன்படுத்தலாம்,’ என்றார். ஆந்திரா, கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், வெங்காயத்தின் சில்லரை விலை கடந்த மாதம் ரூ.40-ல் இருந்து ரூ.54 ஆக உயர்ந்தது. தீபாவளியின் போது விலை அதிகரிக்கலாம் என்றனர்.