ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் உலக கவிஞர்கள் பேரவை கவியரங்கம் நடந்தது. உலக ஒற்றுமையை கவிதை மூலம் கொண்டாடவும், உலகம் முழுவதும் படைப்பாற்றலை வளர்க்கவும் உலகக் கவிஞர்கள் பேரவையின் 43-வது சர்வதேச மாநாடு மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
மாநாட்டின் தொடர்ச்சியாக ராமேஸ்வரம் மற்றும் காரைக்குடியில் உலகக் கவிஞர் பெருமன்றம் சார்பில் கவியரங்கம் நடைபெற்றது. ராமேசுவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் தேசிய நினைவிடத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கவியரங்கத்துக்கு உலகக் கவிஞர்கள் பேரவைத் தலைவர் மரியா யூஜினியா சோப்ரானிஸ் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, கலாமின் அண்ணன் மகள் நசிமா மரைக்காயர், பேரன் ஷேக் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உலகக் கவிஞர்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த கவிஞர்கள் கவியரங்கத்தில் தங்கள் கவிதைகளை வாசித்தனர். கவிஞர் ஈசாக் நன்றியுரை வழங்கினார்.