ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பக தோப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் மா விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. மாம்பழங்கள் ருசியாக இருப்பதால் இப்பகுதியில் எப்போதும் கிராக்கி இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஒருவித சேதம் ஏற்பட்டு மாம்பழம் விளைச்சல் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தற்போது பூக்கும் பூக்களில் அதிக அளவில் புழுக்கள் காணப்படுகின்றன.
இந்த புழுக்கள் கூட்டம் கூட்டமாக பூக்களை காலி செய்கின்றன. இதன் விளைவாக, பூக்கள் இருந்த இடத்தில், இப்போது பூக்கள் இல்லாமல் ஒரு தண்டு மட்டுமே உள்ளது. இதைக் கண்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மாம்பழ விவசாயம் ஆண்டுதோறும் தடைபடுகிறது. தற்போது செண்பகத்தோப்பு வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் மா மரங்களில் பலமுறை பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தாலும் புழுக்கள் அதிகளவில் உள்ளது. இந்த புழுக்கள் மரங்களில் பூத்திருக்கும் பூக்களை சேதப்படுத்தும். இதன் விளைவாக, பூக்கள் இருந்த இடத்தில் இழைகள் மட்டுமே இருக்கும். புழுக்களை கட்டுப்படுத்தவும், மீதமுள்ள பூக்களை காப்பாற்றவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.