கனடாவில் நடைபெற்ற 51வது ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி தனது வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக சைப்ரஸுக்குப் பிறகு கனடாவுக்கு சென்றார். கனனஸ்கிஸ் பகுதியில் நடைபெற்ற மாநாட்டுக்கு வந்த அவரை கனடா பிரதமர் மார்க் கார்னி வரவேற்றார். அதன் பின்னர், பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டு, உலக தலைவர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்தார்.

மாநாட்டின் இடையே, அவர் தென்கொரிய அதிபர் லீ ஜாவே-மியூங், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடினார். பிரான்ஸ் அதிபருடன் சந்திப்பின் போது இருவரும் தோளோடு தோள் கொடுத்து மகிழ்ச்சி பரிமாறிக் கொண்டனர். இது இருநாட்டுக்கிடையிலான உறவுக்கு முக்கியமான அறிகுறியாக பார்க்கப்பட்டது.
மேலும், பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஜெர்மனியின் பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோஸா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் ஆகியோரையும் பிரதமர் மோடி தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகள் அனைத்தும் உலக சவால்களை எதிர்கொள்வது குறித்தும், சிறந்த எதிர்காலத்தை கட்டமைப்பது குறித்தும் ஆலோசனைகளாக இருந்தன.
மாநாட்டுக்குப் பிறகு, தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உலக தலைவர்களுடன் பயனுள்ள விவாதங்கள் நிகழ்ந்ததாகவும், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். கனடா பயணத்தை முடித்த பிறகு, அவர் அடுத்ததாக குரோஷியாவை நோக்கி பயணமாகியுள்ளார்.