அமெரிக்கா சிரியா மீது விதித்திருந்த பொருளாதார தடைகளை நீக்க உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து சவூதி அரேபியாவின் ரியாதில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அவர் பேசியது பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானதாக இருந்ததாகவும், வர்த்தகமே நாடுகளுக்கு எதிர்பார்த்த வளத்தை தரும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா முன்பு பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இது அந்த நாட்டின் வளர்ச்சியை பின்னடைவைச் சந்திக்க வைக்க காரணமாக இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறிவருவதால், தடைகளை நீக்க உத்தரவிட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷரா தலைமையிலான நிர்வாகத்துக்கு இது பெரிய உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
சிரியா மீண்டும் அமைதியும் வளர்ச்சியும் அடைய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.சவூதி இளவரசர் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து இந்த முடிவை டிரம்ப் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பேச்சின் போது சிரியா மீண்டும் உலக நாடுகளுடன் கூட்டு வளர்ச்சி அடையும் என நம்பிக்கை வெளியிட்டார்.
அமெரிக்க அரசியலில் இது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. மேலும், சிரியா மீதான பொருளாதார நடவடிக்கைகள் உலகளவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் எதிர்காலத்தில் தெரியவரும்.இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிரியா-அமெரிக்க உறவுகளில் புதிய பக்கம் தொடங்கப் போகிறதா என்பது அனைவரும் எதிர்பார்க்கும் கேள்வி.