ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்களைக்கொண்டு சிறப்பான நகரமாக விளங்கிய இந்த தலக்காடு நகரத்தின் ஆதி கட்டமைப்பு 16ம் நூற்றாண்டில் மணலில் புதையுண்டது. உடையார்களின் ஆட்சிக்காலத்தின் போது நிகழ்ந்த இயற்கைப்பேரிடர் சம்பவத்தால் இப்படி நிகழ்ந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பின் உள்ளூர் ஐதீகக்கதைகள் வேறுவிதமான நம்பிக்கைகள் மூலமாக சொல்லப்படுகின்றன. அதாவது இந்தப் பிரதேச ராணியான அலமேலு என்பவரின் சாபத்தால் தலக்காடு நகரம் மண்ணில் புதையுண்டு போனதாக அந்த கதைகள் தெரிவிக்கின்றன.
ஒரு காலத்தில் ஐந்து புகழ் வாய்ந்த சிவன் கோயில்களை சிறப்பாகக் கொண்டிருந்த இந்த தலக்காடு நகரம் முதலில் கங்க வம்சத்தினராலும் பின்னர் சோழர்களாலும் ஆளப்பட்டுள்ளது. பின்னர் ஹொய்சள மன்னர் விஷ்ணுவர்த்தனால் சோழர்கள் வெல்லப்பட்டனர். இறுதியில் இந்த நகரம் விஜயநகர அரசர்களால் ஆளப்பட்டு கடைசியாக மைசூர் உடையார் வம்ச ஆட்சியாளர்கள் வசம் வந்தது.
மைசூர் ராஜா தலக்காடு பகுதியை நோக்கி படையெடுத்தபோது ராணி அலமேலு தன் நகைகளை காவிரியில் வீசிவிட்டு தானும் அந்த நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்படி அவர் இறப்பதற்குமுன் ஒரு சாபத்தையும் விதித்துவிட்டு இறந்ததாக நம்பப்படுகிறது. அதாவது எதிரி வசம் சென்ற தலக்காடு நகரம் மண் மூடிப்போகும் என்றும், ‘மலங்கி’ சுழலாக மாறும் என்றும் மைசூர் மன்னர் வம்சம் தலைமுடி இழந்து போவார்கள் என்றும் அவர் சாபமிட்டதாக சொல்லப்படுகிறது. 16ம் நூற்றாண்டில் பழைய தலக்காடு நகரம் மண் மூடிப்போனதாக அறியப்படுகிறது.
இந்த தலக்காடு நகரம் இங்குள்ள ஐந்து முக்கியமான கோயில்களுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. வைத்யநாதேஸ்வரர் கோயில், பாதாளேஷ்வரர் கோயில், மருளேஷ்வரர் கோயில், அர்கேஷ்வரர் கோயில் மற்றும் மல்லிகார்ஜுனா கோயில் என்பவையே அவை. இந்த எல்லா கோயில்களும் மண் மூடியே காணப்படுகின்றன என்ற போதிலும் தற்சமயம் இவற்றை முழுதும் வெளிக்கொணர திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இவை தவிர கீர்த்திநாராயணா கோயில் எனப்படும் ஒரு விஷ்ணு கோயிலும் ஐந்து சிவன் கோயில்கள் மத்தியில் காணப்படுகிறது. இது இப்போது மறு கட்டுமானம் செய்விக்கப்படும் நிலையில் உள்ளது. காவேரி ஆறு இந்த நகரத்தின் வழியாக ஒடுவதுடன் இங்கு ஒரு திடீர் வளைவையும் தன் பாதையில் கொண்டுள்ளது. எனவே இந்த காவிரிக்கரையிலிருந்து தெரியும் இயற்கைக்காட்சிகள் அற்புதமாய் காணப்படுகின்றன.