மன்னார்குடி: தமிழகம் எப்போதும் வரலாற்று பெருமைகளை உள்ளடக்கியது. கோயில்கள் மட்டுமின்றி பல்வேறு வகையிலும் தன்னகத்தே ஏராளமான பொக்கிஷம் போன்ற பெருமைகளை கொண்டுள்ளது. திரும்பும் இடம் எல்லாம் ஸ்பெஷல்தான்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் பெருமைக் கொடியை மேலும் உயர்த்துகிறது ராஜகோபால சுவாமி கோயில் குளமான மன்னார்குடி தெப்பக்குளம். இதற்கு இன்னொரு பெயர் இருக்கு. ஹரித்ரா நதி என்று அழைக்கின்றனர். என்னங்க தெப்பக்குளம் என்று சொல்றீங்க நதின்னு சொல்றீங்க என்ற கேள்வி எழலாம். முன்பு நறுமணமிக்க செண்பகமரங்கள் நிறைந்த காடாக இந்த ஊர் இருந்துள்ளது. பின்னர் நிலத்தை திருத்தி நாடாக்கி உள்ளனர். அதனால்தான் மன்னார்குடிக்கு செண்பகாரண்யம் என்ற பெயரும் உண்டு. இதுமட்டுமின்றி சுத்தவல்லி வளநாடு, ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம், குலோத்துங்க சோழ விண்ணகரம், ராஜேந்திர சோழ விண்ணகரம், வாசுதேவபுரி, தட்சிணதுவாரகா, வண்டுவராபதி, சுயம்புத்தலம், மன்னவர்குடி, ராஜமன்னார்குடி என்று பல பெயர்கள் உண்டு.
நதி போன்றுதான் இக்குளம் அமைந்துள்ளது. இதன் காரணப்பெயரை பற்றி அறிந்து கொள்வோம். மன்னார்குடி வரும் பக்தர்களும் சரி, சுற்றுலாப்பயணிகளும் சரி ஹரித்ரா நதி என்கிற இந்த தெப்பக்குளத்தை கண்டு பிரமித்துதான் போய்விடுவார்கள். கோவில்பாதி, குளம்பாதி என்ற பழமொழிக்கு உரித்தான ஊர்தான் மன்னார்குடி. முன்பு மன்னார்குடியில் மொத்தம் 98 குளங்கள் இருந்துள்ளது. என்னங்க ஆச்சரியமாக இருக்கிறதா. உண்மைதான். தற்போது பாதிக்குமேல் இல்லை.
இருப்பினும் மன்னார்குடியில் இன்றும் நுழையும் தெருக்களிலெல்லாம் குளம் இருக்கிறது. இதை வைத்தே மன்னார்குடியின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம். இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தது போன்றதுதான் மன்னார்குடி தெப்பக்குளம்.
கோபிலர், கோப்பிரளயர் என்ற இரண்டு முனிவர்களுக்கு பரந்தாமன் கண்ணனாக காட்சி அளித்தார். குளத்தில் கண்ணன் கோபிகையருடன் குளித்துக் கொண்டு இருந்த போது அந்த கன்னிகையரின் உடலில் பூசிய மஞ்சள் (ஹரித்ரா) மற்றும் நறுமணப் பொருட்கள் இக்குளத்தின் தீர்த்தத்தில் படிந்தபடியால் இக்குளம் ஹரித்ரா (மஞ்சள்) என்ற காரணப்பெயரில் அழைக்கப்படுகிறது.
இக்குளம் காவிரியின் மகள் என்றும், 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஒன்று சேர்ந்தது என்றும் புராண வரலாறு கூறுகின்றன. மன்னார்குடி ராஜகோபால சுவாமிக்கு தினமும் திருமஞ்சன தீர்த்தம் இக்குளத்தில் இருந்து தான் எடுத்துச்செல்லப்படுகிறது.
இக்குளத்தில் வைகாசி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும் அமாவாசை, பவுர்ணமி, கிரகண காலங்களிலும் ரோகிணி, திருவோண நாட்களிலும் நீராடினால் கண்ணபிரானின் திருவருள் கிடைக்கும் என்றும், மாசி மாதம் முழுவதும் நீராட முடியாமல் போனாலும் கடைசி மூன்று நாட்களாவது நீராடினால் சிறப்பு உண்டு.
மற்ற புண்ணிய தலங்களில் 1 கோடி ஆண்டுகள் இருந்து பெறும் பலனை, ஹரித்ரா நதி கரையில் ஒரு ஆண்டில் அடையலாம் என்று புராணம் கூறுகிறது. பிருகு முனிவர் வேண்டுகோளுக்கு இணங்கி காவிரியை பெரிய குளமாக தேக்கி அதில் ராஜகோபாலன் குளித்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவின் பெரிய தெப்பக்குளம் என்றால் அது மன்னார்குடி ஹரித்ரா நதி என்கிற தெப்பக்குளம்தான். 1,158 அடி நீளமும், 847 அடி அகலமும், 23 ஏக்கர் பரப்பளவும் கொண்டது. இந்த மன்னார்குடி தெப்பக்குளம். பிரமாண்டமாக காட்சி அளிக்கும் இந்த தெப்பக்குளத்தை பார்ப்பதற்காகவே பல மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.