55ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் நடைபெற்றது. இதில் மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்று பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். குறிப்பாக பாப்கான் தொடர்பாக மூன்று வகையான ஜிஎஸ்டி விதிப்பதற்கான பரிந்துரைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாப்கானின் வகைகளுக்கு 18% வரி, 12% வரி மற்றும் 5% வரி விதிக்க பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. கார்மெல் பாப்கானுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உப்பு மற்றும் காரமாக இருக்கும் பாக்கெட் செய்யப்பட்ட பாப்கானுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், “Ready to eat” பாப்கானுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரையிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களின் ஜிஎஸ்டி விகிதத்தை 12% இருந்து 18% ஆக உயர்த்துவது தொடர்பான பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது. இது பேட்டரி கார்களையும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய கார்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த பரிந்துரைகள் மீதும் விரைவில் முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.